வேலியே பயிரை மேய்ந்தால்......................
தபால்காரரே தபால்களை திருடினால்!?
அதைத்தான் செய்தார் ஒரு தபால்காரர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர் திருடியது DVD மற்றும் கம்ப்யூட்டர் கேம்ஸ் அடங்கிய பார்சல்களைத்தான். உரியவர்கள் அளித்த புகாரின் பேரில், இவரை ஆதாரத்துடன் பிடிக்க துடித்தது தபால் துறை. இவரது அதிகாரிகளே தெரிந்தவர்கள் பெயரில் பார்சல்களை அனுப்பி வலை விரித்து காத்திருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை; சிக்கிக்கொண்டவர் அடம்பிடிக்காமல் சுலபமாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். போலீஸ் புகார், வழக்கு என அடுத்து நடைபெற வேண்டிய சம்பிரதாயங்கள் அடுக்கடுக்காய் நடந்தேறின. 22 ஆண்டு அனுபவம்; ஆண்டொன்றிற்கு ரூபாய் 22.50 லட்சம் சம்பளம் அனைத்தையும் இழந்துவிடும் அபாயம்.
அது மட்டுமா?
இன்னும் என்னென்ன தண்டனையோ?
முதலில் இப்படியெல்லாம் தான் பயந்து போனார்.
ஆனால், நீதிமன்றம் கருணை காட்டியது.
ஏன்?
கடந்த ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் பிரான்ஸிலுள்ள டிஸ்னிலேண்டுக்கு போனார் அவர். அங்கே, ராட்சச ஆகாய சறுக்கிலேறி விளையாடினார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. 10 வயது சிறுவனாக பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது, இவர் பயணம் செய்த பள்ளிக்கூட வேன் மிகவும் கோரமான விபத்துக்குள்ளானதில் தலையில் காயத்துடன் உயிர் பிழைத்தது இவர் ஒருவர் தான். அந்த விபத்தை நினைவுகளாகவும் காட்சிகளாகவும் மனத்திரையில் ஓட வைத்தது இந்த ஆகாய சறுக்கு விளையாட்டு. அப்போதுதான் ஒரு பயங்கரமான சம்பவத்திற்குப்பின் ஏற்படும் மன அழுத்தக்கோளாறுக்கு அவர் ஆளானதும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுமே அவர் இது போன்ற திருட்டுக்களை செய்யக்காரணமாக அமைந்ததென்றும்; இது ஒரு அபூர்வ நிகழ்வென்றும்; எனவே கருணைகாட்ட வேண்டுமென்றும் வாதாடினார் அவரது வழக்கறிஞர்.
டிஸ்னிலேண்டிலுள்ள அந்த ஆகாய சறுக்கு மிகவும் பயங்கரமான வளைவுகளையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது என்றும் அதன் வேகம் மிகவும் அதிகம் என்பதையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குறைந்த பட்ச தண்டனையாக வழக்கு செலவுக்கான தொகையை அபராதமாகவும் 6 மாதங்களுக்கு அவர் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை வீட்டைவிட்டு வெளியே செல்லத்தடைவிதித்தும் தீர்ப்புக்கூறியது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கற்பனையல்ல; இங்கிலாந்திலுள்ள ஹார்விச் நகர தபால் நிலையத்து 43 வயது தபால்காரர்,
ஜார்ஜ் ராம்ப்ளின் என்பவரது உண்மை வழக்கு


8:37 AM
Raja
0 கருத்துகள்:
கருத்துரையிடுக